இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உரிமை பெறாமல் வணிக நோக்கத்தில் செயல்படும் அனைத்துப் பொது கட்டிட உரிமையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், “அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், நூலகங்கள், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் கோம், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பொதுக் கட்டிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965–ன் கீழ் முறையாக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

பொதுக் கட்டிட உரிமையாளர்கள், கட்டிடங்களுக்குப் பொறுப்பாளர்கள் பொதுக்கட்டிட உரிமம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம், கட்டிட உறுதித்தன்மை குறித்தான பதிவு பெற்ற பொறியாளர் சான்று, பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று, சுகாதாரத்துறைச் சான்று ஆகியவற்றை இணைத்து உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தாசில்தார் கள ஆய்வு செய்து ஆவணங்களை பரிசீலித்து உரிமம் வழங்குவார்.

மேலும் உரிமம் பெற்ற உரிமைதாரர்கள், உரிய காலக் கெடுவிற்குள் தவறாது தங்களது கட்டிட உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.

உரிமம் பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் பொதுக் கட்டிடங்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமைதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுக் கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஆட்சியர் நடராஜன் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.