சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரி. இன்று காலை தங்கசாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சண்முகசுந்தரி புறப்பட்டார். வியாசர்பாடி வந்த அவர், அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் தங்கசாலைக்கு சென்று கொண்டிருந்தார்.
பேசின்பிரிட்ஜ் மேம்பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, சண்முகசுந்தரியின் அருகில் பயணம் செய்த 3 பெண்கள், அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார்.
இதை பார்த்த ஆட்டோ டிரைவர், மூலக்கொத்தளம் சிக்னலில் இருந்த போக்குவரத்து போலீசாரின் அருகில் ஆட்டோவை நிறுத்தினார். உடனே ஆட்டோவில் இருந்த ஒரு பெண் கீழே குதித்து தப்பியோடினார். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருச்சியை சேர்ந்த சடையாச்சி (30), சர்மிளா (24) என தெரிந்தது. சடையாச்சி கர்ப்பிணியாக உள்ளார். இதை பயன்படுத்தி கொண்டு, கூட்டம் அதிமாக இருக்கும் இடத்தில் திடீரென மயங்கி விழுவதுபோல் நடிப்பார்.
அந்த நேரத்தில், பொதுமக்கள் பரிதாபப்பட்டு, அவருக்கு உதவி செய்வார்கள். அதை சாதகமாக்கி கொண்டு, அவர்கள் அணிந்துள்ள நகையை, நைசாக திருடுவார் என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
