சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் சேவைக்கு அரசு திட்டமிட்டது.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பாரிமுனை, சென்ட்ரல், சிம்சன், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை நந்தனம் வழியாக சைதாப்பேட்டை வரை பூமிக்கு அடியில் ரயிலை இயக்குவதற்கு முடிவு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

கடந்த வாரம் ஆயிரம் விளக்கு மசூதி அருகே கடந்த வாரம் சிலையில் பள்ளம் ஏற்பட்டு, அதில் சிமென்ட் கலவை வெளியேறியது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் அந்த பள்ளம் சீரமைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அண்ணா மேம்பாலம் அருகில் பஸ் நிறுத்தம் எதிரே, திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக சென்ற மாநகர பஸ் மற்றும் ஒரு கார் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால், பாதிப்பு இல்லை. பின்னர், அந்த பள்ளம் சீரமைக்கப்பட்டு, நேற்று மாலை முதல் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை அண்ணா மேம்பாலம் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளம் ஏற்பட்ட பகுதியின் சில அடி தூரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலை வேளை என்பதால், வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த நேரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்படுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், மெட்ரோ ரயில் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.