கோவை அருகே சோமனுரில் மேற்கூரை இடிந்து விழுந்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். 

கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டடம் ஒன்று இருந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தபோது, பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில், 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு ஆட்சியாளர்களின் கவனக்குறைவும் ஊழலுமே காரணம் என கூறி பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். 

அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் வேலுமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், அமைச்சர் காரில் ஏறி கிளம்பி சென்றார்.