தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விஜயேந்திரர் மீது தொடரப்பட்ட மனு மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்த‌ரர் கலந்து கொண்டார்.  அப்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 

அதில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்த‌ரர் மட்டும் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். 

இதனால், தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்திரர் மீது சர்ச்சை எழுந்தது. 

இதற்கு சங்கர மடம் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது தியானம் செய்வது எங்களின் வழக்கம் என்று மழுப்பல் பதில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

இந்த மனு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதில் அளிக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என போலீஸுக்கு உத்தரவிட்டது.