அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் வகையில் முதல்வர் அமைத்த அமைச்சர்கள் குழு இன்று சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நிதிநிலை மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்றினை அமைத்து தமிழக அரசு இந்த மாதத் தொடக்கத்தில் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவைக் காண அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் நிதியமைச்சர் தென்னரசு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், மனிதவளத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் சென்னையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
