குன்னுார்
நீலகிரியில், சேலாஸ், அதிகரட்டி, கேத்தி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், பல கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை முதலீடு செய்து, விதிகள் மீறி காட்டேஜ்களை கட்டி வருகின்றனர்.
'புவியியல் துறையினரின் அனுமதியின்றி, குன்னுாரில் பல கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குன்னுார் அருகே, கடந்த 22-ல் நடந்த கட்டுமான பணியின்போது, 4 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இந்த பகுதிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர், தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இப்பகுதியில் புவியியல் துறையினர் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை.
மக்கள் சேவை மைய நிறுவனர் மனோகரன் இதுகுறித்து கூறுகையில், “குன்னுார் அருகே, நான்கு பேர் பலியான இடத்தை, புவியியல் துறையினர் இன்னும் பார்வையிடவில்லை.
மேலும், அந்த பகுதியில், கட்டுமானங்களை கட்ட புவியியல் துறை அனுமதி கொடுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அத்தகைய இடத்தில், உள்ளாட்சி நிர்வாகங்கள் எதன் அடிப்படையில், கட்டுமானங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கின என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், நீலகிரியில் இதுபோன்று அனுமதியின்றி நடத்தப்படும் கட்டுமானங்களை புவியியல், துறையினர் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குறிப்பாக, சேலாஸ், அதிகரட்டி, கேத்தி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில், பல கோடி செலவில், விதிகள் மீறி காட்டேஜ்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இத்தகைய பகுதிகளில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இதுகுறித்தும் வருமான வரி; அமலாக்க துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்று மனோகரன் கூறினார்.
