கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள்.. அமைச்சர் சிவசங்கர் மட்டுமல்ல.! உதயநிதியும் கிளம்புறாரு.!!
கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஒடிஷா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பிய ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
இந்த விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா, "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என்று கூறினார்.
இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் சென்னைக்கு ரிசர்வ் செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கை 869 ஆகும். பதிவு செய்யாமல் ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது வரை, அந்த விபத்து நடந்த பாதையில் செல்லவிருந்த 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.
உடனடியாக அவசர உதவி எண் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். இந்த நிலையில் இந்த குழுவினருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ