சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தவும்  தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கூவத்தில் கலக்கும் சென்னை நகரின் கழிவுநீரால் வங்கக்கடல் நீர் மாசு படுவது குறித்து  வந்த செய்தியை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம்  தாமாகவே முன்வந்து  வழக்கு தொடர்ந்தது. இது குறித்த விசரரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ்,  நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களை சுத்தப்படுத்தி அதனை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை செயல்படுத்தும் வகையில்  தனி துறையை உருவாக்க வேண்டும் என்றும்  இயற்கை எழில் மிகுந்த இந்த ஆறுகளை  மீட்டெடுத்து  பொது மக்களின் பயன்பாட்டுக்கு பொழுது போக்கு அமசங்களுடன்  தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் குடியிருப்புகள், பல்வேறு நிறுவனங்களின் கழிவுகளால் இந்த ஆறுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சென்னை நகர் கழிவுகளை மறுசுழற்சி செய்து  அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்  வரும் 30ம் தேதிக்குள்  தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு வணிகர்கள்  உள்ளிட்டோரிடமிருந்து நிதி பெறலாம் என்றும்,  இதற்காக அளிக்கபடும் நிதிக்கு வரிச் சலுகைகள் வழங்களால் என்றும் நீதிபதிகள் அரசுக்கு  யோசனை தெரிவித்தனர்.