பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை..? குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்..? கூட்டுறவுத்துறை உத்தரவு
2023 ஆம் ஆண்டு பொங்கலை பண்டிகையை சிறப்பாக கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் பரிசுத் தொகை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய கணக்கை தொடங்க அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது. சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களும் பணமும் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் பொங்கலுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகை வழங்கியது போல் வழங்க வேண்டும் என வலியிறுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 1000 ருபாய் வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆயிரம் ரூபாய் நியாவிலைக்கடைகளில் வழங்குவதற்க்கு பதிலாக வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லையென்றும் தெரிவித்தார். எனவே, கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி விவரங்களை பெற்று பதிவு செய்யவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்