ஈரோடு

நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மலைப் பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாறும் கலக்கும் இடமே பவானிசாகர் அணை.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற புகழ் பெற்ற பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் 15 அடி சகதி கழித்தது போக அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

இந்த அணையில் இருந்து வெளிவரும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக நீலகிரி மலைப்பகுதியான குன்னூர் பகுதியில் இருந்து பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாறும் உள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழைப் பெய்யாததால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது வந்தது. 28–ஆம் தேதி 644 கன அடியும், நேற்று முன்தினம் காலை 1426 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து சடசடவென அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8 மணிக்கு 4992 கன அடி தண்ணீர் வந்தது. நீர்மட்டம் 58.58 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு 190 கன அடியும், வாய்க்காலுக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.