Asianet News TamilAsianet News Tamil

தொடரும் ஆற்று மணல் திருட்டு; நிலத்தடி நீர் பெருமளவு பாதிப்பு; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

Continuing river sand theft Large scale damage to ground water People request to take action ...
Continuing river sand theft Large scale damage to ground water People request to take action ...
Author
First Published Apr 12, 2018, 8:14 AM IST


சிவகங்கை
 
கல்லல், தேவகோட்டை பகுதிகளின் முக்கிய நீராதாரமான விருசுழி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் ஊற்றுத் தண்ணீர் கூட எடுக்க முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் விருசுழி ஆறு மற்றும் தேனாறு ஓடுகிறது. இதில் கல்லல், தேவகோட்டை பகுதிகளின் முக்கிய நீராதாரமாக விருசுழி ஆறு உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு, திருப்பத்தூர் வழியாக கல்லல், தேவகோட்டை வந்து, பின்னர் திருவாடானை வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. 

கடந்த பத்து ஆண்டுகளாக போதிய மழையின்றி வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் இந்த ஆற்றில் தண்ணீர் வந்து பல வருடங்கள் ஆகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் தற்போது மணல் திருட்டு தாராளமாக நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தற்போது ஆற்றில் ஆங்காங்கே மணல் அள்ளப்பட்டு பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள், "கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டை பகுதி தண்ணீர் தேவையை விருசுழி ஆறு நிறைவேற்றி வந்துள்ளது. மழையில்லாததால் தற்போது ஆறு வறண்டு காணப்படுகிறது. 

ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோன நிலையில் தற்போது மணல் திருடப்படுவதால், நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. முன்பெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த ஆற்றில்தான் மக்கள் குழி தோண்டி ஊற்று தண்ணீர் எடுப்பார்கள். தற்போது ஊற்று தண்ணீரும் வருவதில்லை. 

ஆற்றில் தொடரும் மணல் திருட்டே இதுபோன்ற நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பிற்கு காரணம். எனவே, மணல் திருடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios