அரசு பள்ளி மாணவர்களுக்கான.. மருத்துவ கலந்தாய்வு.. இன்று தொடக்கம் !!
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,930 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 1,145 எம்.பி.பி.எஸ். மற்றும் 635 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு சேரும் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டிற்கு 24,949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 14,913 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலில் 1,806 பேர் உள்ளனர். விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலின் படி 719 மாணவர்கள் இன்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். 2 நாட்களில் மொத்தம் 2,135 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதற்கட்ட கலந்தாய்வு 9 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலின் படி மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இன்று சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 30ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஆன்லைனில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.