மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன் திமுக தனது கடந்த கால டெல்லி பயணங்களையும், தற்போதைய நிர்வாகத் தோல்விகளையும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் கருத்தாக உள்ளது. 

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே "டெல்லி" நோக்கிய பயணங்கள் குறித்த வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லியில் கூட்டணி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பதைக் கண்டித்து, அதிமுக ஐடி விங் திமுகவின் கடந்த கால வரலாற்றை முன்வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனங்கள் குறித்துப் பேசும் அதிமுக, 2011 தேர்தல் காலத்தை நினைவூட்டுகிறது. அப்போது காங்கிரஸ் தலைமையுடன் கூட்டணி அமைக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் பல மணிநேரம் டெல்லியில் காத்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள விமர்சனத்தில் ' 'டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். 2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்?

உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, பகீர் என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி? அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை?

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, மக்கள் எக்கேடாய் போனால் என்ன? என்று டெல்லியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ? நீங்கள் எல்லாம் அடுத்தவர்களைப் பார்த்து பேச ஏதாவது அருகதை இருக்கிறதா?

எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து விருந்தில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா என்ன? எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் பரஸ்பர நல்ல நட்போடு, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

“டெல்லியின் சம்மதம் பெற்று” என்று ஸ்டாலின் சொல்வாரானால், “ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ப. சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களை காட்டி மிரட்டியதில் பணிந்து தான் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தது” என்று நாங்கள் சொல்லலாமா?

ஸ்டாலின் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது… ஒருவன் சந்தையில் ஒரு குதிரையை வாங்கினான். குதிரையை விற்றவன் “இது அற்புதமான குதிரை. ஓடும் நீரைக் கூட வேகமாக கடந்து சென்று கரையைத் தொடும்” என்றான். அந்த வியாபாரி பேச்சை நம்பி குதிரையை வாங்கி , நீரில் விட்ட பிறகே தெரிந்தது, அது மண் குதிரை என்று. மண் குதிரை கரைந்துவிட, நல்வாய்ப்பாக நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பித்து வந்தான். தப்பித்து வந்த கையோடு , நனைந்து கொண்டே கோபத்தின் உச்சியில் சந்தைக்கு சென்ற அவனைப் பார்த்து அந்த வியாபாரி , “இன்னொரு குதிரை வேண்டுமா?” என்று கேட்டானாம்.

அந்த வியாபாரி போல தான் ஸ்டாலின். இவர் சொன்ன விடியல் என்ற வார்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்துவிட்டு, மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி கூவி கூவி விற்கப் பார்க்கிறார்.

ஐயோ… தமிழக மக்கள் பாவமில்லையா ? என விமர்சித்துள்ளது அதிமுக ஐடிவிங். மொத்தத்தில், மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன் திமுக தனது கடந்த கால டெல்லி பயணங்களையும், தற்போதைய நிர்வாகத் தோல்விகளையும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் கருத்தாக உள்ளது.