Consultation for farmers Warning Do not Use Banned Pesticides

விழுப்புரம்

விழுப்புரத்தில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கலந்தாலோனைக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று வேளாண் உதவி இயக்குநர் கனகலிங்கம் எச்சரித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வடகரைத்தாழனூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குநர் கனகலிங்கம் கலந்து கொண்டு பேசியது: "முகையூர் வட்டாரத்தில் தற்போது நெல், கரும்பு, உளுந்து, மணிலா ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. அனைத்து பயிர்களிலும் பூச்சி நோய் தாக்குதலுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

நெல் பயிரிலும் இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஈ பூச்சி, இலைப் புள்ளி நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய், குலை நோய், கழுத்துக் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

விவசாயிகள் பூச்சி நோய் கண்காணிப்பை சரிவர மேற்கொண்டு, பயிர் பாதுகாப்பு மருந்துகளை தேவையான அளவு பயன்படுத்தி, மிகவும் பாதுகாப்பான முறையில் தெளிக்க வேண்டும்.

விவசாயப் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் என்பது, பொருளாதார சேத நிலைக்கும் மேல் இருக்கும்பட்சத்தில், பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.

இயன்றவரை இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சானங்களான பஞ்ச காவ்யா, ஜீவா மிர்தம், வேப்ப எண்ணெய், வேப்பங் கொட்டை சாறு மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக் கூடாது.

இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாக இருந்தால், வேளாண் அலுவலர்களின் ஆலோசனைகள் பெற்று, அதிக வீரியமில்லா மருந்துகளை, தேவையான அளவு மட்டுமே கொள்முதல் செய்து, அவற்றை பாதுகாப்பான முறையில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிருக்குத் தேவையான மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகளை காலை 10 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு பிறகும் தெளிக்க வேண்டும்.

மருந்து கலக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, மூக்கு, வாய், கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். காற்று வீசும் திசையிலேயே மருந்துகள் தெளிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்..

இந்தக் கூட்டத்தில் வேளாண் அலுவலர் அனுராதா, வேளாண் உதவி அலுவலர் தா.சிவநேசன் மற்றும் ஆத்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள், விவசாயிகள் அதிகளவில் பங்கேற்றனர்..