Confrontation in the temple procession in Kanchi
காஞ்சி வரதராஜர் பெருமாள் கோயில் விழாவில், சமஸ்கிருத பாடல்களைப் பாடுவதா? அல்லது தமிழ்ப் பாடல்களைப் பாடுவதா? என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் எழுந்தது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜர் பெருமாள் கோயில் உள்ளது. திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

வைணவ பாரம்பரியத்தில், திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்றதாகும். இது 31-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
இந்த கோயிலில் பிரம்மோஸ்சவம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், சாமி ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடைபெறும்.
திருவிழாவையொட்டி பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம்.

இன்றும் அதேபோன்று பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது, சமஸ்கிருத பாடல்களைப் பாடுவதா? அல்லது தமிழ் பாடல்களைப் பாடுவதா? என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம் எழுந்தது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால் கூடியிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
