சென்னை மாநகர பேருந்தில், 10 ரூபாய் நாணயம் செல்லாது என, வெறுப்பேற்றிய நடத்துனரால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். 

பிராட்வே செல்வதற்காக பயணி ஒருவர், சென்னை, எம்.எம்.டி.ஏ. காலனியில் இருந்து 15 ஜி பேருந்தில் ஏறினார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஏறிய அவர், நடத்துனரிடம் 10 ரூபாய் நாணயம் ஒன்றும், இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். 

10 ரூபாய் நாணயத்தை வாங்கிய நடத்துனரோ, எங்கள் டிப்போவில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று கூறியுள்ளார். மேலும், 10 ரூபாய் நோட்டை கொடுக்கவும் பயணியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதில் அதிருப்தியான அவர், இந்த நாணயம், வேறு ஒரு பேருந்து நடத்துனரிடம் இருந்து வாங்கி வந்ததாகக் கூறினார். 10 ரூபாய் நோட்டு இல்லை என்றால் இறங்கிவிடுங்கள் என்று பயணியிடம் கறாராக கூறியிருக்கிறார்.

இதில் அதிர்ந்துபோன அவர், மற்ற பயணிகளிடம் 10 ரூபாய் நோட்டு வாங்கி கொடுத்த பின்பே, பிராட்வேக்கு டிக்கெட் கொடுத்துள்ளார் 15 ஜி பேருந்து நடத்துனர். நடத்துனரின் இந்த செய்கை பயணிகளை திகைப்புக்கு ஆளாக்கியுள்ளது.