டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளைக் கண்டு கொள்ளாத மத்திய அரசை வன்மையாகக் கண்டித்து நாகையில் சாலை மற்றும் இரயில் மறியல் ஈடுபட்ட 132 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தமிழகம் முழுவதும் பேருந்து, இரயில் மறியல் போராட்டம் நடத்தும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை நாகையை அடுத்த புத்தூர் இரயில்வே கேட் அருகே இரயில் மறியலில ஈடுபடுவதற்காக விவசாயிகள் திரண்டனர்.

திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற எர்ணாகுளம் விரைவு இரயிலை அவர்கள் மறிக்க முற்பட்டனர். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், செந்தில்குமார் மற்றும் காவலாளர்கள் விவசாயிகளை தடுத்தனர்.

இதனால், காவலாளர்களுக்கும், விவசாய பாதுகாப்பாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனிடையே இரயில் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதைத் தொடர்ந்து நாகை - திருவாரூர் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், “டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்.

காவிரி நீர் பங்கீட்டு குழுவை உடனே அமைக்க வேண்டும்.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, பவானி, தாமிரபரணி ஆறுகளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அறிவழகன், பேரறிவாளன், சுரேஷ், விவசாய சங்கத்தைச் சேர்ந்த சரபோஜி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, அங்கு வந்த காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த 12 பெண்கள் உள்பட 132 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தச் சாலை மறியலால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.