Compressing the participation of more than 5000 piritjo urvalattil

இராமேசுவரம்

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் அடக்க ஊர்வலத்தில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6–ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்களும், பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய தொழில் துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கச்சிமடத்துக்கு வந்து இறந்த மீனவர் பிரிட்ஜோவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று மீனவர் பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்ய போராட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 7–வது நாளாக தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மீனவர் பிரிட்ஜோவின் உடலை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து வலசை தெரு வழியாக பிரிட்ஜோவின் உடல் தங்கச்சிமடம் போராட்ட களத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பங்குத்தந்தையர்கள் இராமேசுவரம் சகாயராஜ், தங்கச்சிமடம் அருள்சந்தியாகு, நாட்டரசன்கோட்டை ஆல்பர்ட், தென்குடா சூசைராஜ் மற்றும் பல்வேறு மறைமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பங்குத்தந்தைகள், இறைமக்கள் முன்னிலையில் அடக்க திருப்பலி நடைபெற்றது.

இதில் 5000–க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பிரிட்ஜோவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மீனவரின் உடல் அடக்க நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, சுவாமி பிரணவநந்தா, பா.ஜ.க. சார்பில் மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பலிக்கு பின்னர் 5.30 மணிக்கு பிரிட்ஜோவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்தோணியபுரம் கத்தோலிக்க கல்லறை தோட்டத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்போது அவரது தம்பி எஸ்ரோன் மயங்கி விழுந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.