Communist Party member cheated Rs 4 lakhs people give petition to collector
ஈரோடு
சிறுதொழில் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.4 இலட்சத்தை வாங்கிக்கொண்டு பணத்தை திருப்பி தர மறுக்கும் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், "திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் சிறுதொழில் கடன் பெற்றுத் தருவதாக பச்சாக்கௌண்டன் பாளையத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் ஒருவர் எங்களிடம் பணம் பெற்றுக்கொண்டார்.
நாங்கள் 20-க்கும் மேற்பட்டோர் அவரிடம் சுமார் ரூ.4½ இலட்சம் கொடுத்துள்ளோம். இதுவரை அவர் எங்களுக்கு எந்தவித கடனும் பெற்றுத் தரவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டோம். ஆனால், அவர் பணத்தை தரமறுத்துவிட்டார்.
எனவே, சம்பந்தப்பட்ட கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதேபோல பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.
