மதுரையில் பிப்ரவரி 3ம் தேதி வரை போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் எச்சரித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முதல் இரவு பகலாக மாணவர்கள் உடன் பெண்களும் போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், பழங்காந்தம், திருமங்கலம்,மேலூர், அவனியாபுரம், சமயநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வருகின்றனர்.
வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் கூறி போராட்டம் நடந்து வருவதால் தமிழகம் முழுவதும் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தனியார், பள்ளிகள், ஆசிரியர், ஆட்டோ ஓட்டுனர், பேருந்து, லாரி, என அனைத்து தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று பிரதமரை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தபோது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது,ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனால் கொதிப்படைந்த மக்கள், தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களை இளைஞர்கள், மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரை செல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில் ஏறிய ஆயிரக்கணக்கானோர் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை திடீரென மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனால் மதுரை முடங்கியது மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன்,அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
