Commissioner says he has not taken any action on the illusion of the fifty statues ...

தஞ்சாவூர்

திருவிடைமருதூர் பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் ஆறு ஐம்பொன் சிலைகள் மாயமானது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், மூன்று கால பூசை முறைகள், அன்னதானம் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு நேற்று வந்தார்.

பின்னர், அவர் தஞ்சையை அடுத்த ஐயம்பேட்டை அருகே உள்ள புள்ளமங்கை சிவன்கோவில், பட்டீசுவரம் காசிவிசுவநாதர் கோவில், கோபிநாதபெருமாள் கோவில், திருமேற்றழிகை இராமலிங்கசுவாமி கோவில், பிரம்மபுரீசுவரர் கோவில், அங்காளம்மன் கோவில், பஞ்சவன்மாதேவி கோவில், வழுத்தூரில் உள்ள கரைமேல் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி, அன்னதான திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் திருவலஞ்சுழி கபர்தீசுவரர் கோவிலில் உள்ள சிலைப் பாதுகாப்பு மையத்தையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து கும்பகோணம் நாகேசுவரர் கோவிலுக்கு வந்து அன்னதான திட்டம் உள்ளிட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, புனரமைப்பு பணிகள், அன்னதான திட்டங்கள் குறித்தும் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் கும்பகோணத்தில் ஆணையர் வீரசண்முகமணி செய்தியார்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், மூன்றுகால பூசை முறைகள், அன்னதானத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருவிடைமருதூர் பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் ஆறு சிலைகள் மாயமானது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

காவலாளர்கள் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளர்களின் விசாரணைக்கு அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்றுத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் ஞானசேகரன், ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.