தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வேலூரில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிப்பது வேதனைக்குரியது.
பதான்கோட் விமான தளத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒளிபரப்பு செய்தமைக்காக தனியார் தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை சாதாரண விஷயங்களோடு ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரத்தில் ஊடகங்கள் முழு சுதந்திரமாக செயல்பட பாஜக அரசு துணை நிற்கிறது.
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியின் போராட்டம் நடத்தினார். இதை தடுக்க நினைப்பது மனித உரிமை மீறல் என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர், தனது கூட்டணி கடமையை செய்திருக்கிறார்.
நீண்டகாலப் பிரச்சனைக்கு ஒரேநாளில் தீர்வு காண முடியாது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மீனவ சமுதாய நலனுக்காக பல கூட்டங்களை நடத்தியதன் வெளிப்பாடு தான் இந்திய, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் வெற்றி பெறுவதற்கான முதல் படிக்கட்டில் தான் கால் வைத்துள்ளோம். வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக தொடர்ந்து அமைச்சர்களுடன் பேசி வருகிறோம். ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
