வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிசம்பர் 22ம் தேதி வரை மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு  உள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது எனவும்  வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதை பொறுத்து மழையின் அளவு இருக்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்  காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.  இந்த நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக, வரும் 22ம் தேதி வரை தமிழகம், மற்றும்  புதுச்சேரியில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, வேதாரண்யத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளாதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வழக்கமாக  74 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.  ஆனால் 60 செ.மீ. அளவுக்குத்தான் மழை கிடைத்துள்ளது. இன்னும் 14 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண்டும். பருவ மழை முடிய இன்னும் சில தினங்களே  உள்ளது. எனவே சென்னையில் வழக்கமான மழையை விட குறைவாகவே மழை பெய்துள்ளதால் பற்றாக்குறையாகவே அமையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக சேலம் தரும்புரி ராமநாதபுரம், தூத்துக்குடி  உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.