Asianet News TamilAsianet News Tamil

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்; அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்...

College students protest against bus tariff hike Opposition to the government ...
College students protest against bus tariff hike Opposition to the government ...
Author
First Published Jan 23, 2018, 10:09 AM IST


சேலம்

பேருந்து கட்டண உயர்வையும், தமிழக அரசின் நடவடிக்கையும் கண்டித்து சேலத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து,  சேலத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சுமார் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,  தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு நடவடிக்கையைக் கண்டித்து மறியலில் ஈடுபடும் நோக்கில் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.  அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிந்த காவல்துறையினர் மாணவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து,  கல்லூரி நுழைவு வாயிலின் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டு,  தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.  

மேலும்,  பேருந்துக் கட்டண உயர்வினால் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில்,  சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி அமர்ந்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியது:"மாணவ, மாணவியரை மட்டுமல்லாமல்,  கூலித் தொழிலாளி, விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  

தமிழக அரசு இதுகுறித்து உரிய பதில் அளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும்" என்றும் மேலும்,  "இலவச பேருந்து பயண அட்டையை காண்பித்தாலும்,  குறிப்பிட்ட தொகையினை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று நடத்துநர் கட்டாயப்படுத்துகின்றனர்" என்று புகார் தெரிவித்தனர்.

"பெற்றோரின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios