கல்லூரி பேருந்தினுள் இருந்த ஓட்டை வழியாக மாணவி ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் கோவளம் அருகே கேளம்பாக்கத்தில் நடந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள தனபாலன் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு இன்று வழக்கம்போல் மாணவியர் கல்லூரி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் இருக்கைக்குகீழ் போடப்பட்டிருந்த பலகை திடீரென உடைந்து விழுந்தது. இதனால், இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த மாணவி அமுதா, முழங்கால் அளவுக்கு கீழே இறங்கிவிட்டார். இதனால், மாணவி அமுதாவின் கால் நரம்பு துண்டிக்கப்பட்டு நிறைய ரத்தம் வெளியேறி உள்ளது.

இதையடுத்து, மாணவி அமுதாவை மீட்டு, அருகில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி அமுதா பேருந்துக்குள் இருந்து விழுந்ததை அறிந்த கல்லூரி மாணவ - மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், செட்டிநாடு மருத்துவமனையின் முன் பழைய மாமல்லபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது.

மாணவர்கள் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து மாணவ - மாணவிகள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பராமரிப்பு இல்லாத பேருந்தை பயன்படுத்தி வரும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதன் பின்னர் மாணவர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் சென்றனர். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாம்பரம் அருகே உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்து 2 ஆம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்து ஓட்டையினுள் விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கல்லூரி பேருந்து ஓட்டையினுள் மாணவி ஒருவர் விழுந்துள்ளார். பராமரிப்பில்லாத பேருந்தை இயக்கி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் ந்டைபெறுவதாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.