துக்கோட்டையில் இன்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்களாகோவில் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்லத்துரையின் மகள் ஆர்த்தி. இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

இந்நிலையில், பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே உள்ள கிணற்றின் அருகே பாடப் புத்தகங்கள் சிதறி கிடந்தன. மேலும் பெண்ணின் தலைமுடியும் கொத்தாகக் கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில் கிணற்றில் பார்த்தபோது கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றின் அருகே 2 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாணவி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால், கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை நடைபெறவில்லை என்று முதற்கட்ட விசாரணையி்ல் தெரியவந்துள்ளது. வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை நடைபெற்றதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.