தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் நாளுக்கு நாள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கனோர் திரண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

போராட்டக்கார்ரகள் அதிகரித்துள்ளதால், அந்த காமராஜர் சாலை வழியாக செல்லம் அனைத்து மாநகர பஸ்களும், மாற்று பாதையில் திருப்பப்பட்டுள்ளன. தலைமை செயலகம் முதல் சாந்தோம் சர்ச் வரை, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கார், பைக், ஆட்டோ ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் நூற்றுக்கணக்கிலும், மாலையில் ஆயிரக்கணக்கில் கூட்டம் திரளும். ஆனால், கடந்த ஒரு வாரமாக மெரினாவில் போராட்டம் நடைபெறுவதால், எந்நேரமும் லட்சக்கணக்கானோர் காணப்படுகின்றனர்.

குறிப்பாக இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார், தங்களது பணியை செய்ய முடியவில்லை. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து, போலீசாரின் பாதுகாப்பு பணியையும், போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தி சீரமைத்து வருகின்றனர்.
சாதாரணமாக நூறு பேர் கூடும் திருவிழாவில், நகை பறிப்பு, பிக் பாக்கெட், பைக் திருட்டு என பல சம்பவங்கள் நடக்கும். ஆனால், லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள மெரினாவில், இதுவரை ஒரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் உள்ளது. இதில், தமிழர்களின் உணர்ச்சிய மட்டுமல்ல, அவர்களின் கண்ணியத்தையும் உணர முடிகிறது என அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் கூறுகின்றனர்.
