கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மாணவியை கொலை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசன் எனவும் அவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும் அழகேசன் தொந்தரவால் அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. 

அழகேசன் குறித்து ஏற்கனவே அஸ்வினி போலீசில் புகார் அளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.