சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி, ஆங்கிலம் புரியாததால், தேர்வு பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நந்தினி (18). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி தோட்டக்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து நந்தினி, தமிழ் வழியில் படித்துள்ளார். இதனால், ஆங்கில அனுபவம் இல்லாமல் இருந்துள்ளது. இதையொட்டி அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தின் மீதான தனது பயத்தை சக தோழிகளிடமும் நந்தினி பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த வாரம், நந்தினியுடன் விடுதி அறையில் தங்கியு தோழி, அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதையடுத்து நந்தினி மட்டும் அறையில் தனியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு உணவு நேரத்தில் நந்தினி சாப்பிட சென்றார். அதன்பி அவரை யாரும் பார்க்கவில்லை. நேற்று முன்தினம் மாலை அவரை காணவில்லை. இதனால், விடுதி நிர்வாகம் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நந்தினி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வரப்போகும் செமஸ்டர் தேர்வுகளை நினைத்து நந்தினி, பயத்தில் இருந்துள்ளார். அறை தோழியும் உடனில்லாத நிலையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 
🌻உடனிருக்கும் வகுப்புத் தோழிகள் ஆங்கில வழியில் பாடங்களை கற்க அவ்வப்போது நந்தினிக்கு உதவி வந்த போதும், தனது ஆங்கில அறிவு குறித்த நந்தினியின் தாழ்வு மனப்பான்மை அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. முதலில் தனது கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நந்தினி, பின்னர் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளார் என தெரியவந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.