சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொடர்ந்து சில்லறையாகவே வினியோகம் செய்யப்படுகிறது. 100, 50 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் பொது மக்கள் சில்லறை பாக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி கடந்த 10ம் தேதியில் இருந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்கிறது. கடந்த சில நாட்களாக ரூ.4000க்கு சில்லறையாக 100, 50 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. கடந்த 14ம் தேதி முதல் இந்த தொகை ரூ.4,500 என உயர்த்தப்பட்டது.

தற்போது, ரூ.4,500-க்கான மாற்றுத் தொகையாக ஒரு ரூ.2,000 புதிய நோட்டும், மீதமுள்ள 2,500க்கு 10 ரூபாய் நாணயங்களையும் (100 எண்ணிக்கை கொண்ட 2 பாக்கெட்டுகளும்), ரூ.500க்கு ரூ.20 நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

ரிசர்வ் வங்கிக்கு பணக்கட்டுகள் அவ்வப்போது கொண்டு வரப்படுகின்றன. எனவே, ஓரிரு நாள்களில் 100 ரூபாய் தாள்கள் இங்கு வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.