Asianet News TamilAsianet News Tamil

கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம்; தமிழக நில நிர்வாக ஆணையாளர் நேரில் ஆய்வு...

Coimbatore airport expansion Tamil Nadu Land Commission ...
Coimbatore airport expansion Tamil Nadu Land Commission ...
Author
First Published Dec 16, 2017, 6:40 AM IST


கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை தமிழக நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விமானங்கள் புறப்படுவதற்குப் போதியளவில் ஓடுபாதை இல்லாததால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று தொழிற்துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனையடுத்து கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அந்தப் பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதில், அரசு மற்றும் இராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதியுள்ள நிலங்கள் தனியார் நிலங்களாகும்.

இந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்வதில் இழுபறி நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தும், இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் குறித்து நேற்று கோயம்புத்தூர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நில கையகப்படுத்தப்பட உள்ள உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், சிங்காநல்லூர் ஆகியப் பகுதிகளுக்கு நேரில் சென்றார்.

அப்போது அவர், நில கையகப்படுத்தப்பட உள்ள குடியிருப்புகளின் எல்லைகள், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், விமான நிலைய குத்தகை நிலங்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றிலும் மாற்று வழித் தடங்களை உருவாக்கும் பகுதிகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே தலைமை தாங்கினார்.

இதில், "இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், மாற்று இடம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நில உரிமையாளர்கள் மனுக்கள் கொடுத்தனர்.

அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் கூறியது: "கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிலம் வழங்கும் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையம் விரிவாக்கத்தால் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க முடியும். இதன்மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயர்வதோடு, தகவல் தொழில்நுட்பத் துறையும் முன்னேற்றம் பெரும்.

இதுதவிர திருப்பூர் பனியன் ஏற்றுமதி பலமடங்கு உயரும். வேலை வாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும். மேலும், புதிய தொழில் தொடங்க தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக கோயம்புத்தூர் திகழும்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் அதிகளவில் விமான சேவை வழங்குவதால் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சி பெருகி இந்தியாவிலேயே முன்னோடி மாவட்டமாக திகழும்.

கோயம்புத்தூரின் வளர்ச்சிச் சார்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறும் வகையிலும், முழுவதும் மக்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, இந்தப் பணிகளுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும்" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios