விழுப்புரம்

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், செயற்பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, திட்டமிட்டபடி தேர்தல் அறிவிப்பு, உறுப்பினர் பட்டியல், வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனுக்கள் தாக்கல் செயல்தல், தேவைப்படும் நேர்வுகளில் வாக்குப்பதிவு நடத்துதல், கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்துதல் குறித்து மாவட்ட அறிவுரைகளை வழங்கினார் ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.

மேலும், தேர்தல் பணிக்கு அரசுப் பணியாளர்களை நியமித்தல், வாக்குப் பெட்டிகள், வாக்குப்பதிவு பொருள்களை தயார் நிலையில் வைத்தல், தேவை ஏற்படும் சங்கங்களுக்கு வாக்குச் சீட்டுகளை அச்சிடுதல், தேர்தல் பணிக்கு காவல் பாதுகாப்பு வழங்குதல், தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆட்சியர் அறிவுரைகளை வழங்கினார்.