சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே அமைக்கப்பட்டுள்ள  சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது.

இன்று காலை 10.15 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர்  புதிய ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள்.

சென்னையில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கோயம்பேட்டை  அடுத்த திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் வழியாக நேரு பூங்கா வரை 7.4 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ பயணிகள் ரயில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான விழா இன்று காலை 9.30 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில், நடைபெறுகிறது.

முதலில், திருமங்கலம் உள்ளிட்ட 7 சுரங்க ரயில் நிலையங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து  காலை 10.15 மணிக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைக்கிறார்கள்.

இன்று முதல் பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக மேம்பாலத்திலும், பின்னர் கோயம்பேட்டில் இருந்து சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களான திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரையும் இந்த ரயில் சேவை தொடங்குகிறது.