தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு இத்திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. தமிழக அரசு தெரிவித்ததாவது, திட்ட அமைவிடம் மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் TIFRக்கு இத்திட்டற்கான காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
இத்திட்ட அமைவிடமானது உலக அளவில் உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும். இந்த போடி மேற்கு மலையானது புலிகள் வசிக்கக் கூடிய மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இந்த இணைப்புப் பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கும் அவைகளின் இனப்பெருக்க பரவலுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.மேலும் இந்த மலை பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.
திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய இயந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். மேற்கண்ட காரணங்களை தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய அணுசக்தித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
