Asianet News TamilAsianet News Tamil

சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

cm stalin wrote letter to pm modi regarding scholarship for minority
Author
First Published Dec 7, 2022, 7:07 PM IST

சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது… என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி!!

ஒன்றிய அரசு 2008-2009 ஆம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 2021-2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு 86.76 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து இலட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

இதையும் படிங்க: விவசாயிகளின் நலனுக்காக ரூ.15.40 கோடி மதிப்பிலான திட்டங்கள்... தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும். சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அதோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்புநிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும். எனவே, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினைக் கைவிடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து, உடனடியாக அத்திட்டத்தினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios