Asianet News TamilAsianet News Tamil

தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

cm stalin wrote letter to jaishankar to rescue tamilnadu students safely
Author
Tamilnadu, First Published Feb 24, 2022, 7:03 PM IST

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இன்று அதிகாலையில் ரஷ்ய இராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த, தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் தாம் பெற்றுவருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

cm stalin wrote letter to jaishankar to rescue tamilnadu students safely

இருப்பினும், உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்துள்ளது என்றும், ஒன்றிய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கவும், தமிழர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாகவும், மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

cm stalin wrote letter to jaishankar to rescue tamilnadu students safely

இந்திய அரசு அளவில் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கென்றே ஓர் இணைப்பு அலுவலரைத் தமிழ்நாட்டுக்கென்று அறிவிக்கலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்துவர அந்நாட்டு அரசின் உயர்மட்ட அளவில் இப்பிரச்சனையை எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசை தாம் கேட்டுக்கொள்வதாகவும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தேபாரத் மிஷன் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளத் தாம் கோருவதாகவும் தமது கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios