திமிராக பேசுகிறீர்கள்! தமிழர்களின் தனிகுணத்தை டெல்லி பார்க்க நேரிடும் மத்திய அரசுக்கு - முதல்வர் எச்சரிக்கை
புதிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என்ற மத்திய அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் தனிகுணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தற்போது வரை புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் இணையாமல் உள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய அரசின் நிதி விடுவிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.