CM announces relief for army man family

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீரை ஒட்டியுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறல் செய்து, தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்கிறது.

பாகிஸ்தானின் அத்துமீறல்களால் எல்லையோர ராணுவ நிலைகளிலும், கிராமங்களிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதேபோன்று காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ராணுவத்தினர் மேற்கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. 

இந்த நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள ஜைனபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.. இதில் ராணுவம் தரப்பில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கந்தணியை சேர்ந்த இளையராஜா, மகாராஷ்டிராவை சேர்ந்த கவாய் சுமேத் வாமன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இந்த தொகையை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.