Close to the death of my cousin - the chief letter to the prime minister and the student hangs up and commits suicide

எனது சாவுக்குப் பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை உடைப்பேன் என்று பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு +2 மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

நெல்லை, சங்கரன்கோவில் அடுத்த குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு தினேஷ் நல்லசிவன் என்ற மகன் உள்ளார். தினேஷ் 12 ஆம் வகுப்பு\ படித்து வருகிறார். இந்த நிலையில் மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், மாடசாமி குடித்துவிட்டு, சுற்றியுள்ளவர்களிடம் அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் தினேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். மன உளைச்சலில் இருந்த தினேஷ், நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், தினேஷ் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார், தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ் வைத்திருந்த பை ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அதில், தினேஷ் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. மேலும், நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை அனுமதி சீட்டு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும் இருந்தது.

தினேஷ் எழுதியிருந்த கடிதத்தில், நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. தந்தை குடிப்பதால், தான் இறந்த பிறகு எந்த காரியமும் செய்யக் கூடாது என்றும் .தன்னுடைய சித்தப்பாதான் அனைத்து காரியங்களும் செய்ய வேண்டும். இனிமேலாவது தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதில் கடைசியாக தான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர் முதல்வர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால், ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைப்பேன் என்று மாணவன் தினேஷ் உருக்கமாக எழுதியுள்ளான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.