கோயம்புத்தூர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோயம்புத்தூர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வகாப் என்கிற தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் அவர்கள் அந்த இடத்தில் காவலாளர்கள் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்தனர். 

அப்போது சிலர் சாலையில் படுத்துகொண்டு பேராட்டத்தில் ஈடுபட்டதைத்  தொடர்ந்து காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.