வாணாபுரம்,
திருவண்ணாமலையில், தன் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் வேட்டியால் தூக்குப் போட்டுக் கொண்டார். உடனே, அவரை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ளது பவித்திரம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், அங்கு வாழ்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு திண்டாடுகின்றனர்.
மேலும் சாலைகளை ஆக்கிரமித்து புதிது புதிதாக பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமால் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் பவித்திரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பவித்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் வைத்தியலிங்கம் (35) என்ற தொழிலாளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் துணிகள், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், டார்ச் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஏறினார்.
இதுகுறித்து வெறையூர் காவல் மற்றும் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு காவலாளர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் தாசில்தார் பன்னீர் செல்வம் ஆகியோர் வந்து வைத்தியலிங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது வைத்தியலிங்கம், “ஆட்சியர் பவித்திரம் கிராமத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்றார்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏற முயன்றனர். அதைப்பார்த்த வைத்தியலிங்கம், “செல்போன் கோபுரத்தில் ஏறி என்னை கீழே கொண்டு வர முயன்றால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறும் முயற்சியை கைவிட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா மற்றும் மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வைத்தியலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆட்சியரே பவித்திரம் கிராமத்துக்கு வரவேண்டும் என்று கூறி வைத்தியலிங்கம் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
இதையடுத்து கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் குடிநீர் தொட்டி, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியலிங்கம் 11 மணியளவில் திடீரென செல்போன் கோபுரத்திற்கு மேலேயே தனது வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், காவலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர் சதீஷ்குமார் (26) செல்போன் கோபுரத்தில் வேகமாக ஏறி தூக்கில் தொங்கிய வைத்தியலிங்கத்தை தனது தோள் கொண்டு தூக்கிப் பிடித்தார்.
பின்னர், மற்றொரு தீயணைப்பு வீரர் குருமூர்த்தி கோபுரத்தின் மேல் ஏறி வேட்டியை லாவகமாக கழற்றினார்.
பின்னர் மயங்கிய நிலையில் காணப்பட்ட வைத்தியலிங்கத்தை தீயணைப்பு வீரர்கள் இருவரும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டிருந்த 108 அவசர ஊர்தி மூலம் வைத்தியலிங்கத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுமார் 8 மணி நேரம் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய வைத்தியலிங்கத்தை காண அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்களும் அங்கு திரண்டனர்.
செல்போன் கோபுரத்தில் வைத்தியலிங்கம் வேட்டியில் தூக்குப்போட்டு கொண்டபோது வேகமாக கோபுரத்தின் மீது ஏறி காப்பாற்றிய தீயணைப்பு வீரர் சதீஸ்குமார் மற்றும் குருமூர்த்தியை அப்பகுதி பொதுமக்கள், காவலாளர்கள் கைத்தட்டி வெகுவாக பாராட்டினார்கள்.
