முத்துப்பேட்டையில் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, நகர செயலாளரை பிணமாக அமரவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பேரூராட்சியில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்துவது என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி “முத்துப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பேட்டை, செம்படவன்காடு, மருதங்காவெளி சாலைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனே சீரமைக்க வேண்டும்”.
“முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சிக்கு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பேட்டை சிவன் கோவில் அருகே வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் நகர செயலாளர் காளிமுத்துவை பிணமாக சித்தரித்து அவரது தலையில் வெள்ளைதுணி கட்டி கழுத்தில் மாலை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு நாற்காலியில் அமரவைத்து, சைக்கிள் தட்டு ரிக்சாவில் வைத்து பெண்கள் மற்றும் கட்சியினர் மார்பில் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கனகசுந்தரம், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சமூக ஆர்வலர் முகமதுமாலிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீனாட்சிசுந்தரம், கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், வீரமணி, சீனிவாசன், சாந்தி, கலா, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் முத்துப்பேட்டை துணை காவல் சூப்பிரண்டு (பொறுப்பு) தினகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவருடன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் உமாகாந்தன், வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் பேரூராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அவர்களது போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டனர். பின்பு, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் பேட்டை பகுதி சலசலப்புடன் காணப்பட்டது.
