காஞ்சிபுரம்

மதுராந்தகம் கூட்டுறவு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சுமைப் பணித் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி வழங்க வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சந்தை சமூகத்தில் இருந்து மதுராந்தகம், செய்யூர் ஆகிய வட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ரேசன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணியில் பல வருடங்களாக சுமைப்பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கான கூலி மிகவும் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி தரக் கோரி பலமுறை முறையிட்டும் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே உரிய சட்டக்கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.மாசிலாமணி தலைமைத் தாங்கினார். மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சங்க கௌரவத் தலைவர் வழக்குரைஞர் கிருஷ்ணராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, நடராஜன், சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.