தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று மாலை அறிவிப்பானை வெளியிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து நேற்று திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஜெகன் மோகனுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு!
அந்த வரிசையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். முன்னதாக, சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்.” என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.