திண்டுக்கல் 

கொடைக்கானலில் வருடந்தோறும் தொடங்கும் குளு குளு சீசன் நாளை தொடங்குகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் சீசன் தொடங்கும் முன்னரே அதிகரித்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை குளு குளு சீசன் நிலவும். 

இந்தாண்டு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்வதால் தற்போது குளு குளு சீசன் தொடங்கி உள்ளது. 

மேலும், படகு சவாரி செய்யும் நட்சத்திர ஏரியிலும் அதிகளவு தண்ணீர் உள்ளது. மழையின் காரணமாக நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டுகளில் கோடை காலத்தில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வழங்கும் இரண்டு அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், குடிநீர் பிரச்சனை இருக்காது. 

இந்த ஆண்டு குளு குளு சீசன் தொடங்கியதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் மோயர்பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

இதனிடையே சீசன் தொடங்கியுள்ளதையொட்டி நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், சீசன் தொடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.