கரூர்

படிக்க பிடிக்காததால் காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து ஓடிய சிறுவர்கள் மெரினாவை சுற்றிப் பார்த்துவிட்டு கோவை செல்லும் சரக்கு இரயில் சென்றபோது கரூரில் காவலாளர்கள் மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூறு வட்டம் அருகே உள்ள நெல்வாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் தயானந்தன் (15). அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரதாப் (15).

இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.  இவர்களுக்கு படிக்க விருப்பமில்லை என்பதால் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து எடுத்து வந்த 1000 ரூபாயுடன் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் சென்றுள்ளனர்.

அங்கு மெரீனா கடற்கரையில் சுற்றித் திரிந்த அவர்கள், பணம் செலவானதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று, அங்கு நள்ளிரவில் கோவை நோக்கிப் புறப்பட்ட சரக்கு இரயிலில் ஏறியுள்ளனர்.

அந்த இரயில் கரூர் இரயில் நிலையம் வந்து சுமார் இரண்டு மணி நேரம் நின்றுள்ளது. அப்போது அங்கு சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்த இரயில்வே காவலாளர்கள் சிறுவர்கள் இருவர் இரயிலுக்குள் தூங்குவதைக் கண்டு அவர்களை எழுப்பி அழைத்து வந்து விசாரித்தனர். 

இதில், அவர்கள் படிக்க விருப்பமின்றி வீட்டை விட்டு வெளியேறிய தகவல் தெரிந்தது.
இதனையடுத்து, அவர்கள் கரூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த அமைப்பினர் சிறுவர்களை வெண்ணைமலையில் உள்ள அன்புக் கரங்கள் காப்பகத்தில் தங்கவைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் மாவட்டக் குழந்தைகள் நலக்குழும அலுவலர் முன்னிலையில் நேற்று சிறுவர்கள் இருவரும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.