நாமக்கல்

நாமக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட இருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகர கோனேரிப்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரவி. இவரது மனைவி மைதிலி. இவர்களது மகன் லோககிரி (7). சிறுவன் லோககிரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் இராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அப்போது லோககிரிக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பின்னர் லோககிரி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாள்களாக வெளிப்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் லோககிரி பரிதாபமாக இறந்தான்.

அதேபோல் இராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாமணி (40) என்ற பெண் மர்ம காய்ச்சலுக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிசிச்சை பலனளிக்காமல் பாலாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், பெண் என இருவர் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.