சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. 17 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயனாவரம், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் மாற்றுத்திறனாளி சிறுமியை அதே குடியிருப்பு பணிபுரியும் காவலாளி, பிளம்பர் உள்பட 17 பேர் கடந்த 7 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கீழ்ப்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு கைது செய்யப்பட்டவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் 17 பேரை வருகிற 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக நீதிமன்ற வளாகத்தில் வைத்து இவர்களை வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகுவதில்லை என்று முடிவு செய்தனர். 

இதனிடையே நேற்று புழல் சிறையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார். இந்நிலையில் அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு அளிந்திருந்தனர்.

இதையேற்ற நீதிபதி 17 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் 17 பேரையும் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். ஏற்கனவே 17 பேரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்க்கது.