சென்னை:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8.50 மணி அளவில் யாரும் எதிர்பாரத நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தியானத்தில் அமர்ந்த ஒபிஎஸ், ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உணமைச் சொல்ல தூண்டியது என்று பகிரங்கமாக பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் சசிகலாவைப் பற்றியும், ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டதையும் வெளிப்படையாக சொன்னார்.

இன்று காலையில் அமைச்சர்கள், தொண்டர்கள் ஆதரவு என ஒபிஎஸ் இமேஜ் பாகுபலியாய் உயர்கிறது.

இந்த நிலையில், தீபாவுக்கு அழைப்பு விடுப்பேன் என்று ஒபிஎஸ் பேட்டியளித்ததைத் தொடர்ந்து, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா ஒபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீபா தான் ஜெ,தீபா பேரவையின் தலைவர் என்பதும், இவருக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரின் சந்திப்பி இன்னும் நிகழ்ந்திடாத தருவாயில், அதிமுக தொண்டர்களும், தீபாவின் ஆதரவாளர்களும் ஒருபடி மேல் சென்றுவிட்டனர்.

அது என்னவென்றால், கட்சிக்கு தீபாவும், ஆட்சிக்கு பன்னீர்செல்வமும் இருந்தால் அதிமுகவிற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்றும், அதிமுகவை யாரும் அசைக்க முடியாது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது.

இதிலிருந்து, தீபாவை அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், ஒபிஎஸ்ஸை முதலமைச்சராகவும் பார்க்க தொண்டர்களும், மக்களும் ஆசைப்படுகின்றனர் எனபது தெளிவாகத் தெரிகிறது.